தேசிய பஞ்சாயத்து விருதுகளில் பங்கேற்க ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய மந்திரி கடிதம்
திருத்தியமைக்கப்பட்ட தேசிய பஞ்சாயத்து விருதுகளில் பங்கேற்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார்
புதுடெல்லி:
திருத்தியமைக்கப்பட்ட தேசிய பஞ்சாயத்து விருதுகளில் பங்கேற்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் மந்திரி கிரிராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 10-ம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 2022 அக்டோபர் 31 ஆகும்.
வட்டார, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் சிறந்த முறையில் செயல்படும் பஞ்சாயத்துகளை அங்கீகரிக்கவும், பாராட்டவும், ஊக்கப்படுத்தவும், இந்த விருதுகளின் வடிவம், நடைமுறை மற்றும் வகைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தமது கடிதத்தில் மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
வறுமை இல்லாத விரிவான வாழ்வாதாரம் உள்ள கிராமம், ஆரோக்கியமான கிராமம், குழந்தைகளுக்கு உகந்த கிராமம், தண்ணீர் தன்னிறைவு கிராமம், தூய்மை மற்றும் பசுமை கிராமம், அடிப்படைக் கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற கிராமம், சமூக ரீதியில் பாதுகாப்பான நியாயமான கிராமம், நல்ல நிர்வாகத்துடனான கிராமம், பெண்களுக்கு ஏற்புடையதான கிராமம் என ஒன்பது மையப் பொருட்களில் விருதுகள் பரிசீலிக்கப்பட உள்ளன.
புதிதாக மறு சீரமைக்கப்பட்டுள்ள தேசிய பஞ்சாயத்து விருதுகள் பற்றிய விரிவான தகவல் மற்றும் நடைமுறைகளை www.panchayataward.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.