கோதுமை, பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு: மத்திய மந்திரிசபை ஒப்புதல்

கோதுமை, பருப்புவகைகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டது. அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.;

Update:2022-10-19 03:51 IST

கோப்புப்படம் 

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், 2022-2023 சாகுபடி ஆண்டில் 6 'ரபி' பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்படுகிறது. அதனால், அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 15-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 125 ஆக உயருகிறது.

கடுகு, பருப்பு

கடுகுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.400 உயர்த்தப்படுகிறது. அதனால் அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 50-ல் இருந்து ரூ.5 ஆயிரத்து 450 ஆக உயருகிறது.

மசூர் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.500 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.6 ஆயிரமாக உயருகிறது.

கடலை பருப்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 230-ல் இருந்து ரூ.5 ஆயிரத்து 340 ஆக உயருகிறது.

பார்லி

பார்லிக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயர்த்தப்படுகிறது. அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.1,635-ல் இருந்து ரூ.1,735 ஆக உயருகிறது.

குங்குமப்பூ விதைக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவிண்டாலுக்கு ரூ.209 உயர்த்தப்படுகிறது. அதன் விலை, குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 441-ல் இருந்து ரூ.5 ஆயிரத்து 650 ஆக உயருகிறது.

விவசாயிகளுக்கு அதிக வருவாய்

இந்த முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உற்பத்தியை அதிகரிப்பது, விவசாயிகளுக்கு அதிக வருவாய் அளிப்பது ஆகிய நோக்கங்களுடன் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய பயிர்களின் உற்பத்தி செலவை விட ஒன்றரை மடங்கு லாபம் கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்ததற்கு ஏற்ப இந்த விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கோதுமை, கடுகு ஆகியவற்றின் உற்பத்தி செலவை விட 100 சதவீதம் லாபம் கிடைக்கும். மற்ற பயிர்களை பொறுத்தவரை, 50 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை லாபம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வால், உணவுப்பொருள் பணவீக்கம் உயராது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் உணவுப்பொருள் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்