மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் - ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் இடம்பெறுகிறது

மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தளம் அமைச்சரவையில் இடம்பெறுகிறது.;

Update:2022-08-04 04:04 IST

பாட்னா,

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முக்கிய கட்சியாக விளங்குகிறது. மாநிலங்களவையில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதா தள உறுப்பினரான ஆர்.சி.பி.சிங், சமீபத்தில் பதவிக் காலம் முடிந்து வெளியேறினார். இதையடுத்து தங்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்த காய் நகர்த்தலில் ஐக்கிய ஜனதாதளம் ஈடுபட்டது. மந்திரிசபையில் தங்களுக்கு இடம் தர வலியுறுத்தி வந்தது.

எனவே மத்திய மந்திரிசபை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான முங்கர் ராஜீவ் ரஞ்சன் சிங், நாளந்தா தொகுதி எம்.பி. கவுஷ்லேந்திர குமார், பூர்ணியா எம்.பி. சந்தோஷ் குஷ்வாஹா ஆகியோருக்கு மந்திரி பதவி கேட்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க.வுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் சமீபத்தில் பீகார் வருகை தந்தபோது, ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவரான நிதிஷ்குமார், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்ததால் இதுகுறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.

தற்போது அவர் தொற்றில் இருந்து விடுபட்டுள்ளார். இனி பா.ஜ.க. மூத்த தலைவர் தர்மேந்திரபிரதான் அல்லது குழுவினர் ஐக்கிய ஜனதா தள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப மத்திய மந்திரிசபை ஆகஸ்டு 21-ந் தேதிக்கு பிறகு விரிவாக்கம் செய்யப்படலாம் என்று மத்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்