குருவாயூர் பராமரிப்பு மையத்தில் கோவில் யானைகளை அடித்து துன்புறுத்திய பாகன்கள் - கேரள ஐகோர்ட்டு கண்டனம்

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வழங்கிய கிருஷ்ணா யானை, சிவன் யானையை பாகன்கள் தாக்கியது தெரியவந்தது.;

Update:2024-02-10 04:45 IST

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான யானைகள் பராமரிப்பு மையம் மம்மியூர் பகுதியில் இருக்கிறது. இந்த மையம் யானை கோட்டை என்று அழைக்கப்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே யானைகளை பராமரித்து வரும் 2 பாகன்கள் யானைகளை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதுகுறித்து குருவாயூர் தேவசம்போர்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குருவாயூர் கோவிலுக்கு வழங்கிய கிருஷ்ணா யானை, சிவன் யானையை பாகன்கள் தாக்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில் யானைகளை அடித்து துன்புறுத்தியதாக 2 பாகன்களை தேவசம்போர்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.

இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து நீதிபதி அனில் கே.நரேந்திரன், கோவில் யானைகளை பாகன்கள் தாக்கிய சம்பவம் குறித்து குருவாயூர் தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து குருவாயூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தலையிட்டு, அங்கு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கேரள வனத்துறை தலைமை அதிகாரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்