மக்கள் அமைதி காக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் வேண்டுகோள்
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்ட கண்ணையா லால் என்பவர் இரண்டு பேரால் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதய்பூர்,
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா. இவருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என பரவலாக கோரிக்கைகள் எழுந்த நிலையில், அவர் மீது வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. நுபுர் சர்மா கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை சாடி வருகின்றன.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெய்லர் கடை நடத்தி வந்த கண்னையா லால் என்பவர், நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டததாக கூறப்படுகிறது. இதனால், அவரை பட்டப்பகலில் கடைக்குள் வைத்து இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். மேலும், அதனை வீடியோ எடுத்து எச்சரிக்கையும் செய்துள்ளனர்.
இதனால், உதய்பூர் பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் குவிந்துள்ள போலீசார் அங்கு சட்ட ஒழுங்கு பாதிக்காத வண்ணம் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உதய்பூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. உதய்பூரில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.