மத்திய பிரதேசத்தில் அரங்கேறிய சம்பவம்: தக்காளியால் பிரிந்த கணவன் - மனைவி...!

மத்தியப்பிரதேசத்தில், சமைக்கும்போது இரண்டு தக்காளி கூடுதலாகச் சேர்த்து சமைத்த கணவனிடம், மனைவி சண்டை போட்டுக் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-07-13 16:37 IST

போபால்,

கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே தலையே சுற்றுவதுபோல் இருக்கிறது. அதிலும் சமையலுக்குத் தேவையான பிரதான காய்கறியான தக்காளியின் விலை கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது. அதிலும் பல மாநிலங்களில் தக்காளி கிலோ ரூ.150-க்கு மேல் விற்கப்படுகிறது. இத்தகைய விலைவாசி உயர்வுக்குப் பருவம் தவறிய மழை, வரத்து குறைவு எனப் பல காரணிகள் கூறப்பட்டாலும், இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது என்னவோ நடுத்தர மக்கள் தான்.

இந்தியாவின் பல மாநிலங்களில் தக்காளி விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப்பிரதேசம், ஷாஹ்டோல் மாவட்டத்தில் டிபன் சர்வீஸ் சென்டர் நடத்தும் சஞ்சீவ் பர்மன் சில நாtகளுக்கு முன்பு சமைக்கும்போது தன் மனைவியிடம் தெரிவிக்காமல் இரண்டு தக்காளியைக் கூடுதலாகச் சேர்த்து சமைத்து விட்டாராம். இதனால் அவரின் மனைவி, `ஏன் என்னிடம் எதுவும் கேட்காமல் செய்தீர்கள்' எனக் கணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையிலான வாக்குவாதம் சண்டையாக மாற, மனைவி தன்னுடைய மகளுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அதன் பிறகு சஞ்சீவ் பர்மன், மனைவியை எங்கெங்கோ தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் இறுதியில் போலீசாரின் உதவியை நாடி உள்ளூர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கு போலீசாரிடம், சமைக்கும்போது இரண்டு தக்காளி கூடுதலாகப் போட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மகளுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிய மனைவி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், பேசியே மூன்று நாள்கள் ஆகிறது என்றும் சஞ்சீவ் பர்மன் வருத்ததுடன் கூறியிருக்கிறார். அதையடுத்து போலீஸ் அதிகாரிகள் சஞ்சீவ் பர்மனிடம், தங்கள் மனைவியை தொடர்புகொள்வதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் உறுதியளித்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,

ஆர்த்தி கணவனுடன் சண்டையிட்டு, அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரையும் மொபைல் போனில் பேச வைத்து சமரசம் செய்துள்ளோம். அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்