டெல்லியில் வீசிய புழுதிப்புயல்: மரம் முறிந்து விழுந்து 2 பேர் பலி

டெல்லியில் வீசிய புழுதிப்புயலின்போது மரம் முறிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-05-11 10:28 GMT

டெல்லி,

தலைநகர் டெல்லியில் நேற்று இரவு திடீரென புழுதிப்புயல் வீசியது. பலத்த காற்றுடன் ஒருசில பகுதிகளில் மழையும் பெய்தது. புழுதிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். அதேபோல், விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

டெல்லி வரவேண்டிய விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. டெல்லியில் இருந்து விமானங்களும் காலதாமதமாக புறப்பட்டன. புழுதிப்புயல் தொடர்ந்து வீசியதால் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

புழுதிப்புயல் மற்றும் மழை காரணமாக டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சரிந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல், வீடுகளின் மேற்கூரைகளும் தூக்கி வீசப்பட்டன. நகரின் பல பகுதிகளில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், டெல்லியில் வீசிய புழுதிப்புயலில் 2 பேர் உயிரிழந்தனர். புழுதிப்புயலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது ஜானக்புரி பகுதியில் ஜெய்பிரகாஷ் என்பவர் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.

மேம்பாலம் அருகே சென்றபோது தீடிரென மரம் முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த ஜெய்பிரகாஷை மீட்ட போலீசார் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஜெய்பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், கேஎன் கட்சு மர்க் பகுதியில் மரம் முறிந்து விழுந்த சம்பவத்தில் ஹரிஓம் என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

புழுதிப்புயல் மற்றும் கனமழை தொடர்பாக 23 பேர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.       

Tags:    

மேலும் செய்திகள்