மருத்துவ சீட் வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் மோசடி - இருவர் கைது

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த இருவரை நொய்டா போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-14 01:27 GMT

நொய்டா,

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி பல லட்ச ரூபாய் பண மோசடி செய்த இருவரை நொய்டா போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தீபேந்திரா மற்றும் ராஜேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நொய்டாவில் இருந்து இயங்கி வந்த இவர்கள் லக்னோ, கான்பூர் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் பரந்த நெட்வொர்க்கை கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

லக்னோவைச் சேர்ந்த தர்ஷிகா சிங் என்ற பெண் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகாரின் படி, ட்ரூத் அட்வைசர்ஸ் கேரியர் கன்சல்டன்சி மூலம் பெங்களூருவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக கூறி போலியான ஒதுக்கீட்டுக் கடிதத்தைக் கொடுத்து ரூ.13.98 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து நொய்டா காவல்துறை துணை ஆணையர் ஹரிஷ் சந்தர் கூறும்போது, நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, குறிவைத்து மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி இந்த கும்பல் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் சொந்த மாநிலத்தில் சேர்க்கைக்கு ரூ.35 லட்சத்துக்கும் அதிகமாகவும் , பிற மாநிலங்களில் சேர்க்கைக்கு ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாகவும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து வாங்கி மோசடி செய்துள்ளனர் என்று கூறினார்.

இந்த கும்பலின் முக்கிய ஆபரேட்டரான யாஷ் சதுர்வேதி என்ற நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்