அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட்; ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன்: ஹிமந்தா பிஸ்வா

அதானி குழுமத்துடன் தொடர்புப்படுத்தி டுவிட் செய்ததற்கு எதராக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.

Update: 2023-04-10 05:59 GMT

கவுகாத்தி,

அசாமில் கவுகாத்தி நகரில் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறும்போது, பிரதமர் மோடி வருகிற 14-ந்தேதி அசாமுக்கு வருகை தருகிறார்.

அவரது அசாம் பயணத்திற்கு பின், ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றை தொடுப்பேன் என கூறியுள்ளார். ராகுல் காந்தி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் என்ன விசயம் இருந்தபோதிலும், அது அவதூறு ஏற்படுத்தும் ஒரு பதிவாகும்.

அதனால், பிரதமர் அசாமில் இருந்து திரும்பி சென்ற பின்னர், அந்த டுவிட்டுக்கு நிச்சயம் நாங்கள் பதிலடி தருவோம். கவுகாத்தியில் அவதூறு வழக்கு தொடுக்கப்படும். ஆனால் தற்போது இல்லை. அரசியல் பற்றி பேச தற்போது நான் விரும்பவில்லை. ஏனெனில், பிஹூ பண்டிகையை நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் பல முக்கிய தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். அவர்களில் 5 பேரின் பெயர்களை அதானி பெயருடன் இணைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டார்.

அதனுடன், உண்மையை அவர்கள் மறைத்து விட்டனர். அதனாலேயே நாள்தோறும் தவறாக வழிநடத்தி செல்கின்றனர். அதானி நிறுவனத்தில் ரூ.20 ஆயிரம் கோடி பினாமி பணம் வைத்திருப்பவர்கள் யார்? என்ற அதே கேள்வியே தொடர்ந்து நீடிக்கிறது என அதில் தெரிவித்து உள்ளார்.

அந்த பதிவில், அதானியின் ஆங்கில பெயரில் ஒவ்வொரு எழுத்துடனும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரண் குமார் ரெட்டி, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் அனில் அந்தோணி ஆகியோரை இணைத்து குறிப்பிட்டு உள்ளார்.

இவர்களில் குலாம் நபி ஆசாத் தனி கட்சி தொடங்கினார். மற்ற 4 தலைவர்களும் பா.ஜ.க.வில் சேர்ந்து உள்ளனர். ராகுல் காந்தியின் டுவிட்டர் பகிர்வுக்கு, அவர்கள் தரப்பில் இருந்தும் பதிலடி தரப்பட்டு உள்ளது.

இதுபற்றி அனில் அந்தோணி வெளியிட்ட பதிவில், காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் மற்றும் முன்னாள் கட்சி தலைவர் ஒருவர், தேசிய தலைவர் போல் அல்லாமல், சமூக ஊடக பிரிவில் பணியாற்றுபவர் போன்று பேசுவது வருத்தம் அளிக்கிறது.

தேச கட்டமைப்பு பணியில் பல தசாப்தங்களாக பணியாற்றி வரும் இந்த உயர்ந்த தலைவர்களுடன் சிறியவனான என்னையும் இணைத்து காட்டப்பட்டு உள்ளது. அவர்கள் இந்தியா மற்றும் நாட்டு மக்களுக்கு பணியாற்ற விரும்பி காங்கிரசை விட்டு வெளியேறி உள்ளனர். குடும்பத்திற்காக அல்ல என தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, அசாம் முதல்-மந்திரியான ஹிமந்தா பிஸ்வா வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், போபர்ஸ் ஊழல் மற்றும் நேசனல் ஹெரால்டு ஊழல்களில் தொடர்புடைய குற்றங்களை எங்கே மறைத்தீர்கள் என ஒருபோதும் நாங்கள் கேட்காதது எங்களது நாகரீகம்.

இந்தியாவின் நீதியின் கரங்களில் இருந்து பலமுறை ஒட்டாவியோ குவாத்ரோச்சியை தப்புவிக்க நீங்கள் எப்படி அனுமதித்தீர்கள்? என்றும் நாங்கள் கேட்கவில்லை. எனினும், சட்டத்தின் கோர்ட்டில் நாம் சந்திப்போம் என டுவிட்டர் வழியே பதில் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஜனவரியில் காங்கிரசில் இருந்து விலகிய அனில் அந்தோணி, மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல் மற்றும் வி. முரளீதரன் முன்னிலையில் பா.ஜ.க.வில் கடந்த 6-ந்தேதி இணைந்து உள்ளார்.

இதேபோன்று, காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரன் கேசவன் பா.ஜ.க.வில் கடந்த 8-ந்தேதி இணைந்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்