'ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய முயற்சித்தால்...' - காங்கிரசுக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை

கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வோம் என காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-05-27 09:41 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பிஎப்ஐ போன்று வெறுப்புணர்வை தூண்டும் பஜ்ரங் தல் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

இதனிடையே, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மகனும் சித்தப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பிரியங்க் கார்கே மந்திரியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கான துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை.

அதேவேளை, பிரியங்க் கார்கே இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கர்நாடகாவில் அமைதியை குலைக்கவோ, மதரீதியிலான வெறுப்புணர்வை பரப்பவோ எதேனும் மத அமைப்புகளோ, அரசியல் அமைப்புகளோ முயற்சித்தால் அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளவோ, அதை தடை செய்யவோ நமது அரசு தயங்காது. அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக இருந்தாலும் சரி, பிற அமைப்பாக இருந்தாலும் சரி' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வோம் என்று கூறிய மந்திரி பிரியங்க் கார்கேவின் கருத்திற்கு கர்நாடக பாஜக தலைவர் நலின் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நலின் குமார் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வது குறித்து பிரியங்க் கார்கே கூறுகிறார். பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். தொண்டர். அவர் மத்தியில் ஆட்சியில் உள்ளார். நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள். ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, நரசிம்மராவ் அரசுகள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய முயற்சித்தன. ஆனால், அவை தோல்வியடைந்தன.

பஜ்ரங் தல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்ய முயற்சித்தால் காங்கிரஸ் சாம்பலாகிவிடும். நாட்டின் வரலாற்றை பிரியங்க் கார்கே தெரிந்துகொண்டால் நல்லது. பிரியங்க் கார்கே தனது வார்த்தையை சரியாக பேசவேண்டும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்