திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு பின்னும் தொடரும் வன்முறை சம்பவங்கள்; 100-க்கும் மேற்பட்டோர் காயம்

திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு பின்னரும் தொடர்ந்து அரசியல் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Update: 2023-02-18 20:28 GMT

சட்டசபை தேர்தல்

பா.ஜனதா ஆளும் திரிபுராவில் கடந்த 16-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த வாக்குப்பதிவின்போது பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதில் முக்கியமாக நடந்த 5 வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொண்டனர்.

ஆனால் அன்று இரவு முதலே மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. ஆளும் பா.ஜனதா மற்றும் எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் ஒருவரையொருவர் பல இடங்களில் மோதிக்கொண்டனர்.

இந்த வன்முறை நிகழ்வுகள் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது.

போராட்டங்களும் தீவிரம்

திரிபுராவில் தேர்தல் பாதுகாப்புக்காக வந்திருந்த மத்திய படையினர் மேகாலயா, நாகாலாந்து தேர்தலுக்காக சென்று விட்டதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட இந்த வன்முறையாளர்கள், பல இடங்களில் வெறியாட்டம் போட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த வன்முைற சம்பவங்களுக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்களும் நடந்து வருகின்றன. அந்தவகையில் பா.ஜனதா வேட்பாளர் பபியா தத்தா தலைமையில் நேற்று முன்தினம் அகத்லாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விவேகானந்தா குடியிருப்பு வளாகத்தில் நடந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதிப் ராய் பர்மன்தான் காரணம் என குற்றம் சாட்டிய அவர்கள், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

ஆஸ்பத்திரிகளில் அனுமதி

மாநிலத்தில் 3 நாட்களாக நீடித்து வரும் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் அகர்தலாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மட்டுமே 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைப்போல பிஷால்கர், சோனமுரா, உதய்பூர் போன்ற இடங்களிலும் ஏராளமானோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.

இந்த வன்முறை சம்பவங்களால் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக தொடர் விசாரணையில் ஈடுபட்டு வரும் போலீசார், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்