'ரெயில் பயணிகளை விருந்தினர்களை போல நடத்துங்கள்' - ஜனாதிபதி அறிவுரை
ரெயில் பயணிகளை விருந்தினர்களை போல நடத்துமாறு ரெயில்வே ஊழியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவுரை வழங்கி உள்ளார்.
புதுடெல்லி,
ரெயில்வேயில் அதிகாரிகளாக பயிற்சி பெற்று வரும் 255 பேர் அடங்கிய குழு ஒன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாசார மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இளம் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, பின்னர் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசத்தின் உயிர்நாடி
தேசத்தின் உயிர்நாடியாக ரெயில்வே உள்ளது. லட்சக்கணான பயணிகள் நாள்தோறும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு ரெயில் மூலம் சென்று வருகிறார்கள்.
எனவே லட்சக்கணக்கான மக்களின் முதலாளியாக இருப்பதுடன், கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை தாங்கி செல்லும் வாகனமாகவும் உள்ளது.
அதேநேரம், இந்திய பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி, நாட்டின் ஒற்றுமை மற்றும் சமூக கலாசார பன்முகத்தன்மைக்கும் ெரயில்வே முதுகெலும்பாக உள்ளது.
பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
இந்திய ரெயில்வே சுற்றுச்சூழலின் வளமான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் இந்திய ெரயில்வேயை உலகின் சிறந்த தரமான சேவைகளை வழங்குபவராக மாற்ற பாடுபடுவது உங்களை போன்ற இளம் அதிகாரிகளின் பொறுப்பாகும்.
ரெயிலில் பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தின் நினைவுகளை எடுத்துச்செல்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பை அனைத்து வழிகளிலும் உறுதி செய்ய வேண்டும்.
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பயன்பாடுகளுடன், ெரயில் பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை அளித்து திறமையான தடுப்பு அமைப்புகள் வடிவமைக்கப்பட வேண்டும்.
பயணிகளுக்கு சிறந்த சேவை
ரெயில்வே வாடிக்கையாளர்களை, குறிப்பாக பயணிகளை உங்கள் விருந்தினர்களாகக் கருதி, அவர்கள் போற்றும் வகையில் சிறந்த சேவை மற்றும் சிறந்த அனுபவத்தை வழங்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அதிகரிக்க நீங்கள் உழைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்வதுடன், ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான டன் சரக்குகளை ஏற்றிச்செல்லும் இந்திய ெரயில்வேயில் தொழில்நுட்பத்தை சிறந்த அளவிற்கு பயன்படுத்துவது அவசியம்.
இந்திய ெரயில்வே நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதுமையான மற்றும் தகவமைப்புடன் சிறந்து விளங்குவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ெரயில்வே மின்மயமாக்கல், அதிக சரக்குகளை கையாளுதல் மற்றும் வருவாய் உள்ளிட்ட வளர்ச்சி நடவடிக்கைகள் இதில் முக்கியமான படிகள் ஆகும்.
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.