போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி நடைபெற்றது தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.;
புதுடெல்லி,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி புகார் தொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பிய சம்மனை ரத்து செய்ததற்கு எதிராக அமலாக்கத்துறை, பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கிருஷ்ண முராரி, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கோபால் சங்கரநாதமாராயணன், பிரசாந்த் பூஷண், பாலாஜி சீனிவாசன் உள்ளிட்டோர் வாதிடுகையில், தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான கிரிமினல் வழக்கை, மேற்படி விசாரணையை நடத்தி கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விசாரணை அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்தாமல், சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளனர். நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டே அரசு தரப்பு சிறப்பு வக்கீலை நியமித்தது போல, இந்த விவகாரத்திலும் சிறப்பு விசாரணை குழுவை (எஸ்.ஐ.டி) நியமிக்க வேண்டும். இந்த விசாரணையை குறித்த காலத்துக்குள் நிறைவு செய்ய உத்தரவிட வேண்டும் என வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை மே 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.