70 ஓட்டுகளில் தோல்வி தழுவிய தரம்சிங்
கர்நாடகத்தில் இதுவரை நடைபெற்ற 15 சட்டசபை தேர்தல்களில் கலபுரகி மாவட்டத்தில் உள்ள ஆலந்தா, ஜேவர்கி சட்டசபை தொகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியை சந்தித்துள்ளனர். அதுபற்றி விரிவாக காண்போம்...
1967-ம் ஆண்டு பி.எஸ்.பி. கட்சி சார்பில் ஆலந்தா தொகுதியில் போட்டியிட்ட திகம்பர ராவ் பல்வந்த ராவ், காங்கிரஸ் வேட்பாளர் அண்ணா ராவ் பீமராவை 380 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1985-ம் ஆண்டு இதே தொகுதியில் காங்கிரசின் சரணப்பா பட்டீல், ஜனதா கட்சி வேட்பாளர் பி.ஆர்.பட்டீலை 662 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பி.ஆர்.பட்டீல், பா.ஜனதா வேட்பாளர் சுபாஷ் கத்தேதாரிடம் 697 வாக்குகளில் வெற்றியை பறிகொடுத்தார்.
அதுபோல் ஜேவர்கி தொகுதியில் 1957-ம் ஆண்டு சுயேச்சையாக களமிறங்கிய சரங்கவுடா சித்தராமப்பா 100 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் ருத்ரப்பா நாகப்பாவை வீழ்த்தி வெற்றிக்கனியை ருசித்தார்.
1962-ம் ஆண்டு காங்கிரசின் நீலகண்டப்பா சரணப்பா, சுயேச்சையாக போட்டியிட்ட சென்னபசப்பா தண்டாவிடம் 656 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
ஜேவர்கி சட்டசபை தொகுதியில் 1978, 1983, 1985, 1989, 1994, 1999-ம் ஆண்டு தேர்தல்களில் தொடர் வெற்றிகளை ருசித்த வந்த தரம்சிங் 2004-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி வாகை சூடி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
2008-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட தொட்டப்பா கவுடா பட்டீல் நரிபோலாவிடம் 70 வாக்குகள் வித்தியாசத்தில் தரம்சிங் தோல்வி அடைந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தரம்சிங்கின் மகன் அஜய்சிங், பா.ஜனதா வேட்பாளர் தொட்டப்ப கவுடா பட்டீலை 36,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் சாய்ந்து வெற்றிக்கொடி நாட்டினார்.
இதுபோல் அப்சல்பூர் தொகுதியில் 1978-ம் ஆண்டு ஜனதா கட்சி வேட்பாளர் எம்.ஒய்.பட்டீல், காங்கிரஸ் வேட்பாளர் அனுமந்த்ராவ் தேசாயை 387 ஓட்டுகளிலும், சித்தாப்புரா தொகுதியில் 1994-ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் பாபுராவ் சிஞ்சனூர் சுயேச்சை வேட்பாளர் விஸ்வநாத்தை 826 வாக்குகளிலும், சேடம் தொகுதியில் 1972-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஜே.பி.சர்வேஷ், என்.சி.ஓ. வேட்பாளர் போஜப்பா மொகலப்பாவை 969 வாக்குகளிலும் தோற்கடித்தார்.
1983-ம் ஆண்டு சிஞ்சோலி தொகுதி தேர்தலில் காங்கிரசின் தேவந்திரப்பா கலப்பா, ஜே.என்.பி.யின் வைஜ்யநாத் பட்டீலை 88 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
1978-ம் ஆண்டு கலபுரகி சட்டசபை தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் கமருல் இஸ்லாம் 763 வாக்குகள் வித்தியாசத்தில் ஜே.என்.பி. வேட்பாளர் சதர்ஹூசைன் உஸ்தாத்தை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார்.
அதுபோல் கலபுரகி புறநகர் தொகுதியில் 1983-ம் ஆண்டு தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட ஷாணப்பா 298 ஓட்டுகளில் காங்கிரசின் நரசிங்கராவ் ஜாதவையும், 1985-ம் ஆண்டு தேர்தலில் ஷாணப்பா 75 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேச்சை வேட்பாளர் குருநாத் சந்திரமாவை தோற்கடித்து வெற்றிக்கனியை ஈட்டினார்.