சிக்கமகளூருவுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுப்பு; வாகனங்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு

தசரா பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் சிக்கமகளூருவுக்கு படையெடுத்துள்ளனர். வாகனங்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-03 19:00 GMT

சிக்கமகளூரு;

தசரா விடுமுறை

கர்நாடகத்தில் மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கடந்த 30-ந்தேதி முதலே கா்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

இதேபோல், மலைநாடு மாவட்டமான சிக்கமகளூருவிலும் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். சிக்கமகளூருவில் உள்ள பாபாபுடன்கிரி மலை, முல்லையன்கிரி மலை, மாணிக்கத்தாரா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகிறார்கள். பச்சை பசேலென்று காட்சி அளிக்கும் மலைகளை பார்த்து ரசித்தனர். பாபாபுடன்கிரி மலை, முல்லையன்கிரி மலையில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தது.

போக்குவரத்து நெரிசல்

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கமகளூருவில் குவிந்த வண்ணம் உள்ளனர். மலையில் பூத்து குலுங்கும் மலர்களை பார்த்து ரசித்ததுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் பஸ்கள், கார்கள், சுற்றுலா வாகனங்களில் குவிந்தனர்.

இதனால் பாபாபுடன்கிரி மலை, முல்லையன்கிரி மலையில் பகுதிகளில் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. மேலும் சிக்கமகளூரு நகரிலும் ஏராளமான வாகனங்கள் வந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீர் செய்தனர்.

மதுபானங்கள், பாலிதீன் பைகள்...

மேலும் சிக்கமகளூருவில் உள்ள ஓட்டல்கள், சொகுசு விடுதிகள் நிரம்பி வழிகின்றன. அங்கு கட்டணமும் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் அங்கு தங்கினர். மேலும் ஓட்டல்கள், விடுதிகளில் இடம் கிடைக்காதவர்கள் தங்கள் வாகனங்களிலேேய தூங்கினர்.

மலை பகுதிக்கு மதுபானங்கள், பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வாகனங்களில் இருந்த மதுபானங்கள், பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்