வாணிவிலாஸ் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தீபாவளி விடுமுறையையொட்டி வாணிவிலாஸ் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கையை கண்டு ரசித்தனர்.
சிக்கமகளூரு:
சிக்கமகளூரு மாவட்டம் இரியூர் அருகே வாணிவிலாஸ் அணை உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த அணை, 80 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் வாணிவிலாஸ் அணை கடல் போல காட்சி அளிக்கிறது. இந்த அணை பகுதி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தீபாவளி விடுமுறையையொட்டி நேற்று வாணிவிலாஸ் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். இதனால் வாணிவிலாஸ் அணையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் ஏராளமான வாகனங்கள் வந்ததால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகள் வாணிவிலாஸ் அணையையும், அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரையும் தங்கள் செல்போன்களில் படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அணையின் அழகையும் அவர்கள் பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.