"இன்று தான் உங்கள் குடும்பத்திற்கு தீபாவளி.." - சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை மீட்ட சம்பவத்திற்கு ஜார்க்கண்ட் முதல்-மந்திரி பாராட்டு

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2023-11-28 21:15 GMT

Image Courtacy: ANI

ராஞ்சி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் 4.50 கிலோமீட்டர் தூரத்துக்கு மலைக்கு கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்துவந்தது.

கடந்த 12-ம் தேதி நடந்த சுரங்கப்பாதை விபத்தில் தொழிலாளர்கள் 41 பேர் சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து இன்று 17-வது நாளாக மீட்புப் பணி நடைபெற்றது. இன்று மாலை தொழிலாளர்களை மீட்க துளையிடும் பணி நிறைவடைந்தது. இதனால் அவர்களது உறவினர்கள் சுரங்கத்தில் குவிந்தனர்.

இதற்கிடையே, ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட உள்ளது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீட்புப் பணிகளை முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி நேரில் சென்று பார்வையிட்டார். மீட்கப்பட்டவர்களிடம் முதல் மந்திரி கலந்துரையாடினார்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களை மத்திய மந்திரி வி.கே.சிங் வரவேற்றார். தொழிலாளர்கள் மீட்கப்பட்டதும் அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிலையில் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் வெற்றிகரமாக மீட்டதை ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பாராட்டினார்.

இதுதொடர்பான அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உத்தரகாண்டில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் நிச்சயமற்ற தன்மை, இருள் மற்றும் கடும் குளிரைக் கடந்து 17 நாட்களுக்குப் பிறகு எங்களின் 41 துணிச்சலான தொழிலாளர்கள் இன்று வெற்றி பெற்றுள்ளனர்

உங்கள் துணிச்சலுக்கும் தைரியத்திற்கும் வணக்கம். இந்த விபத்து நடந்த நாள் தீபாவளி, ஆனால் இன்று தான் உங்கள் குடும்பத்திற்கு தீபாவளி. உங்கள் குடும்பத்தினர் மற்றும் அனைத்து நாட்டு மக்களின் நடுநிலை நம்பிக்கை மற்றும் பிரார்த்தனைகளுக்கும் தலை வணங்குகிறேன். சுமந்து சென்ற அனைத்து அணிகளுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த வரலாற்று மற்றும் தைரியமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள்.

நாட்டைக் கட்டியெழுப்புவதில் எந்தவொரு தொழிலாளியின் பங்கையும் புறக்கணிக்க முடியாது. தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் நலன் நமது நோக்கங்களிலும் கொள்கைகளிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று இயற்கையும் காலச் சக்கரமும் மீண்டும் மீண்டும் நமக்குச் சொல்கிறது" என்று முதல்-மந்திரி சோரன் பதிவிட்டிருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்