மங்களூருவில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவ மாநகராட்சி முடிவு
மங்களூருவில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவ மாநகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மங்களூரு:-
சத்ரபதி சிவாஜி சிலை
மங்களூரு மாநகராட்சி கூட்டம் கடந்த அக்டோபர் 29-ந்தேதி நடந்தது. இந்த கூட்டத்தில், சத்ரபதி சிவாஜி மராத்தா சங்கத்தின் கோரிக்கையை ஏற்று மங்களூரு பம்ப்வெல் சர்க்கிள் பகுதியில் மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டது. இதற்கு மங்களூரு மாநகராட்சி கவுன்சிலும் ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு மாநகராட்சி கூட்டம் நடந்தது. அப்போது, மங்களூரு நகரில் சத்ரபதி சிவாஜி சிலை நிறுவும் மாநகராட்சியின் முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காங்கிரஸ் எதிர்ப்பு
இதுகுறித்து மங்களூரு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நவீன் டிசோசா பேசுகையில், கர்நாடகத்துக்கு எதிராக மராட்டிய ஏகிகிரண் சமிதி அமைப்பினர் போராடி வருகிறது. கர்நாடக எல்லையில் அந்த அமைப்பினர் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இந்த சூழ்நிலையில் மங்களூருவில் சத்ரபதி சிவாஜி நிலையை நிறுவுவது சரியல்ல. சிவாஜி சிலைக்கு பதிலாக துளு நாட்டின் இரட்டை சகோதரர்களான கோடி-சென்னய்யாவின் சிலையை நிறுவலாம் என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் சசிதர் ஹெக்டே கூறுகையில், எல்லை பிரச்சினையில் மராட்டிய அமைப்பினர் கர்நாடகத்துக்கு எதிராக செயல்படும் நேரத்தில் மங்களூருவில் சிவாஜி சிலை நிறுவுவது தேவையற்றது. அவரது சிலைக்கு பதிலாக கடலோர மாவட்டத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரரின் சிலையை நிறுவலாம் என்றார்.
வாக்குவாதம்
அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள், இந்து தலைவர்களை எதிர்ப்பதையே காங்கிரஸ் வழக்கமாக கொண்டுள்ளது. மன்னர் சத்ரபதி சிவாஜி பெயரை மராட்டியத்தில் மட்டும் வைத்துவிட கூடாது என்றனர்.
அப்போது காங்கிரஸ், பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மாநகராட்சி கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.