வாகன நெரிசலை கட்டுப்படுத்த பெங்களூருவுக்கு தனி ஆணையம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு

பெங்களூருவில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனி ஆணையம் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Update: 2022-09-08 21:51 GMT

பெங்களூரு: பெங்களூருவில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தனி ஆணையம் உருவாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

வாகன நெரிசல்

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் நாளுக்கு நாள் வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 1 கோடி வாகனங்கள் சாலைகளில் செல்கின்றன. இதனால் நகரில் முக்கிய சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. அதுவும் மழை காலத்தில் நகரில் எங்கு பார்த்தாலும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பித்து போகும்.

இதனால் பெங்களூருவில் வாகன ஓட்டிகள், மக்கள் தினமும் சொல்லொண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறார்கள். இந்த வாகன நெரிசலை கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இதுவரை வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.

மத்திய மந்திரியுடன் ஆலோசனை

இந்த நிலையில், பெங்களூருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பது, கர்நாடகத்தில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்கரி தலைமையில் பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட கர்நாடக அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தனி ஆணையம்

பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியுடன் ஆலோசனை நடத்தினேன். தரைவழி போக்குவரத்து குறித்து 3 நாட்கள் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது.

பெங்களூருவில் வாகன போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க தனியாக ஒரு ஆணையத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா வருகிற சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசின் உதவியை கேட்டுள்ளோம். பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகள் குறித்தும் விவாதித்தோம்.

நெடுஞ்சாலையில் மழைநீர் நிற்காதவாறு தேவையான கால்வாய் வசதிகள் ஏற்படுத்தப்படும். அந்த சாலையில் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் கால்வாய்கள் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். தரைச்சாலை அமைக்க முடியாத இடங்களில் உயர்த்தப்பட்ட சாலைகளை அமைப்பது குறித்தும் விவாதித்தோம். சிராடிகாட் உள்ளிட்ட பல்வேறு சாலை திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினோம்.

மூன்றடுக்கு சாலை

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை திறக்கும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. சில பணிகள் முடிக்க வேண்டியுள்ளது. அந்த பணிகளை முடித்த பிறகே தேதி முடிவு செய்யப்படும். பெங்களூருவில் மூன்றடுக்கு சாலை போக்குவரத்து முறையை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரே தூணில் மெட்ரோ ரெயில், வாகன போக்குரத்து சாலை அமைக்கப்படும். இதனால் நிலம் கையகப்படுத்துவது குறையும். இதுகுறித்து சர்வதேச நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தி திட்டம் வகுக்கப்படும். இந்த திட்டம் முதலில் பையப்பனஹள்ளியில் செயல்படுத்தப்படும்.

பெங்களூரு வெளிவட்டச்சாலை திட்டத்தில் சிறிய அளவில் வட்டச்சாலை அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்