"ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் திட்டத்தை கைவிட்டதே தமிழ்நாடு அரசுதான்" - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

Update: 2024-07-25 00:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய அரசின் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரெயில்வே பட்ஜெட் விவரங்களை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேற்று மாநிலங்கள் வாரியாக தெரிவித்தார்.

இதன்படி தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு பற்றி அவர் கூறுகையில், "கடந்த 2009-2014-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டு ரெயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்காக ஆண்டு சராசரி ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இந்த ஆண்டு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.6 ஆயிரத்து 362 கோடி ஒதுக்கி இருக்கிறார். இது முந்தைய ஆட்சியைவிட 7 மடங்கு அதிகம் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் 1,302 கி.மீ. நீளத்துக்கு புதிய ரெயில்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 215 கி.மீ. என்ற அடிப்படையில் மொத்தம் 2152 கி.மீ. தூரம் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. 687 ரெயில்வே மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது 22 புதிய ரெயில்பாதை திட்டங்கள் ரூ.33 ஆயிரத்து 467 கோடிக்கு நடந்து வருகிறது.

அம்பாசமுத்திரம், அம்பத்தூர், சென்னை கடற்கரை, எழும்பூர், பூங்கா, சிதம்பரம், மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம், நெல்லை உள்பட 77 ரெயில் நிலையங்கள் அம்ரித் ரெயில் நிலையங்களாக மாற்றப்படுகிறது. ரெயில்வே பாதுகாப்பு விஷயங்களுக்காக நாடு முழுவதும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. ரெயில் டிரைவர்கள் விஷயத்தில் அரசியல் காரணங்களுக்காக பிரச்சினை எழுப்பப்படுகிறது. ரெயில் டிரைவர்களுக்கு விதிகளின்படி ஓய்வு, ஏ.சி. அறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது.

ராமேசுவரம்-தனுஷ்கோடி திட்டம் 

தமிழ்நாட்டில் ரெயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்கும் பணியில் சுணக்கம் உள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இருபக்கமும் பயன்பாடு இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2,749 ஹெக்டேர் நிலம் ரெயில்வேக்கு தேவைப்பட்டது. இதில் 807 ஹெக்டேர் நிலம்தான் கிடைத்து இருக்கிறது.

ராமேசுவரம்-தனுஷ்கோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் எடுப்பு பிரச்சினைகளால் அந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. ரெயில்வேக்கான ஆட்கள் தேர்வும் இந்த ஆட்சியில் அதிகமாகத்தான் நடந்திருக்கிறது" என்று அவர் கூறினார்.

இதுதவிர ரெயில்களில் ரூ.1,112.57 கோடியில் 'சுவாச்' என்னும் தானியங்கி ரெயில் பாதுகாப்பு சாதனம் பொறுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்