மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி சில மாதங்களில் முடிவுக்கு வரும் - சுவேந்து அதிகாரி

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும் என பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-19 17:58 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என்று பாஜக தலைவரும், மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "இங்கு நடைபெற்று வரும் ஊழல் ஆட்சியை போலீசார் தான் பாதுகாக்கின்றனர். ஆனால், இந்த ஆட்சியின் நாட்கள் முடிந்துவிட்டன. இன்னும் சில மாதங்களில் இவர்களின் ஆட்சி முடிந்து விடும். இந்த ஆட்சியை இனி போலீசால் காப்பாற்ற முடியாது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக அங்குலம் அங்குலமாக போராடும். உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரசின் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலமான அணிகளை பாஜக அமைக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுவேந்து அதிகாரியின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது அவர் அமித்ஷாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். சந்தர்ப்பவாதியாகவும், நெறிமுறையற்றவராகவும் இருந்த அவர், அதன்பின் பாஜகவில் இணைந்தார். ஒரு நெறிமுறையற்ற நபரின் பேச்சுகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என திரிணாமுல் கட்சியின் பொதுச் செயலாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்