மேற்குவங்காளம்: பஞ்சாயத்து தேர்தல் வேட்பாளர் அடித்துக்கொலை

மேற்குவங்காளத்தில் வரும் 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது.

Update: 2023-06-18 02:19 GMT

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 11ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பஞ்சாயத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அம்மாநிலத்தின் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாயத்து தேர்தலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மல்டா மாவட்டத்தில் சுஜாபூர் பகுதி பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக முஸ்தபா ஷேக் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். தேர்தலில் போட்டியிட ஷேக் வேட்புமனு தாக்கல் செய்து களப்பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் முஸ்தபா ஷேக் நேற்று அடித்துக்கொல்லப்பட்டார். தேர்தல் பணிகளை முடித்துவிட்டு நேற்று வீடு திரும்பிக்கொண்டிருந்த ஷேக்கை இடைமறித்த சிலர் அவர் மீது சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த ஷேக்கை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ஷேக்கை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

முஸ்தபா ஷேக்கை காங்கிரஸ் கட்சியினர் கொலை செய்துவிட்டதாக ஷேக்கின் உறவினர்களும், திரிணாமுல் காங்கிரசாரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய போலீசார் அப்துல் மனன் (வயது 48) என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி கடந்த 2 நாட்களுக்கு முன் காங்கிரசில் இணைந்த நபர்களே ஷேக்கை கொலை செய்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்