திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் இன்று வெளியீடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Update: 2022-05-24 01:45 GMT

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை உள்ளது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்கான ஒதுக்கீடாக தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

அதேபோல் ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ஒதுக்கீடாக சுப்ரபாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதன சேவை டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

இதற்கு பக்தர்கள் 26-ந்தேதி மாலை 3 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 26-ந்தேதி மாலை 6 மணியளவில் ஆன்லைனில் குலுக்கல் நடக்கும். அதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பக்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பக்தர்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெறலாம்.

மேலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை (உற்சவல்) டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்குகிறது என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்