அப்பி அருவி தடாகத்தில் மூழ்கி தெலுங்கானாவை சோ்ந்த 3 பேர் பலி
குஷால்நகர் அருகே அப்பி அருவி தடாகத்தில் மூழ்கி தெலுங்கானாவை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். சுற்றுலா வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
குடகு:
சுற்றுலா வந்தனர்
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. மாநிலத்தின் சிறந்த சுற்றுலா தலமாக குடகு திகழ்கிறது. இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி ெவளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் குடகிற்கு சுற்றுலா வந்தனர்.
அவர்கள் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள ரெசார்ட்டில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் அவர்கள் 11 பேரும் குஷால்நகர் அருகே மூகூட்லு பகுதியில் உள்ள அப்பி அருவியை பார்க்க சென்றனர்.
3 பேர் சாவு
அப்போது அவர்கள் அப்பி அருவியின் அழகையும், இயற்கை அழகையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாகிந்திரா (வயது 19) என்பவர் அப்பி அருவியில் குளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென்று அருவியின் தடாகத்தில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த ஷியாம் (36), ஸ்ரீஹர்ஷா (18) ஆகிய 2 பேரும் சாகிந்திராவை காப்பாற்ற சென்றுள்ளனர்.
அப்போது அவர்களும் தடாகத்தில் மூழ்கி தத்தளித்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்ப உறுப்பினர்கள், காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் குஷால்நகர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் தடாகத்தில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
3 பேரின் உடல்களையும் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இது பார்ப்போரின் கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து குஷால்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்பி அருவியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.