வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி நகை-பணம் கொள்ளை
உப்பள்ளியில் வீடு புகுந்து 6 பேரை கட்டிப்போட்டு ரூ.1 கோடி நகை- பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுவிட்டது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
உப்பள்ளி:
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பசவேஸ்வரா நகரில் லட்சுமி லே-அவுட்டை சேர்ந்தவர் உல்லாச தொட்டமணி. இவர் வித்யா மந்திர் புத்தக கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் உப்பள்ளி டவுனில் உள்ள ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து இந்து அமைப்பினர் வழிபாடு நடத்தினர். மாலையில் அந்த சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஏரியில் கரைத்தனர்.
இதையொட்டி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேளதாளம் முழங்க விநாயகர் சிலை ஊர்வலம் நடந்ததால், அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த சமயத்தில் உல்லாச தொட்டமணி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்துள்ளனர். ஒவ்வொருவராக உள்ளே புகுந்துள்ளனர். வீட்டில் இருந்த 6 பேரையும் ஒவ்வொருவராக கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர்.
கொள்ளையர்களை பார்த்ததும் வீட்டில் இருந்தவர்கள் திருடர்கள்... என சத்தம் போட்டுள்ளனர். ஆனால் மேளதாளம் முழங்க நடந்த ஊர்வலத்தால் அந்த சத்தம் அக்கம்பக்கத்தினர் யாருக்கும் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், வீட்டில் இருந்த அலமாரியை திறந்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பின்னர் மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன் பிறகு பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் உல்லாச தொட்டமணி வீட்டுக்கு வந்த போதே இந்த கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து கோகுல் ரோடு போலீசில் உல்லாச தொட்டமணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
விசாரணையில், 8 பேர் கொண்ட கும்பல் கிரீல் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்ததும், வீட்டில் இருந்த 6 பேரையும் கை, கால்களை கட்டிப்போட்டு மர்மநபர்கள் நகைகள், பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகையை பதிவு செய்து கொண்டனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கோகுல் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.