திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் தீக்குளித்த வாலிபர்

உப்பள்ளியில் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் கிம்ஸ் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2022-12-31 18:45 GMT

பெங்களூரு:

வாலிபர்கள் குமுறல்

கர்நாடகத்தில் சமீபகாலமாக திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் பல வாலிபர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலர், வெளிப்படையாகவே தங்களின் மன குமுறல்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். கோலாரில் பிரசாரத்துக்கு சென்ற குமாரசாமியிடம் வாலிபர் ஒருவர் தான் விவசாயம் பார்ப்பதால் பெண் தர மறுப்பதாக குற்றச்சாட்டு கூறினார்.

சிலர் வெளிப்படையாக தங்களின் குமுறல்களை கூறினாலும், பலர் வெளியே எதுவும் கூறாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொைலக்கு முயன்ற சம்பவம் உப்பள்ளியில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

திருமணத்துக்கு பெண்...

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அம்மினபாவி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் வரன் தேடியும், பெண் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 30 வயது ஆகியும் தனக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் சந்தோஷ் மனமுடைந்து காணப்பட்டு வந்தார்.

இதனால் அவர் மனநலமும் பாதிக்கப்பட்டார். இதன்காரணமாக அவர் யாரிடமும் சரியாக பேசாமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்துள்ளார்.

தீக்குளித்து தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்று அவர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி கொண்டு அந்தப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்றார். அங்கு வைத்து திடீரென்று பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். மேலும் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் அவர் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்து சந்தோசை மீட்டனர்.

பின்னர் அவரை உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 50 சதவீத தீக்காயம் அடைந்த அவர், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்