வருகிற நவம்பரில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும்; பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பேச்சு

வருகிற நவம்பரில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.;

Update:2022-08-25 02:30 IST

பெங்களூரு:

வியாபாரமாக மாற்றப்பட்டது

இந்தியன் அகாடமி குழு கல்வி நிறுவனங்கள் சார்பில் பெங்களூருவில் 5 அரசு பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் திறப்பு விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கலந்து கொண்டு அந்த பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து பேசியதாவது:-

உணவு, கல்வி, சுகாதாரத்தை விற்பனை செய்ய கூடாது என்ற கொள்கையில் நம்பிக்கை கொண்ட நாடு இந்தியா. ஆனால் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு சேவையும் வியாபாரமாக மாற்றப்பட்டது. அதற்கு கல்வியும் தப்பவில்லை. தன்னிறைவு, தன்மான கல்வி வழங்கும் இந்திய கல்வியை பாழாக்கி தங்களுக்கு வசதியான கல்வி முறையை அமல்படுத்தினர்.

அனைவருக்கும் தரமான கல்வி

இதனால் நமது நாடு இன்றும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. அந்த கொள்கையை நாங்கள் அமல்படுத்துகிறோம். காந்தி, சுவாமி விவோகனந்தர் கனவு கண்ட கல்வி முறையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பதே புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.

அரசு பள்ளிகளை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அரசுடன் கைகோர்த்து வருகின்றன. கட்டிடங்கள் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும். சமூகத்தில் கடைக்கோடியில் உள்ள மனிதரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

கழிவறை வசதிகள்

அரசு பள்ளிகளில் கழிவறை வசதிகளை ஏற்படுத்த அரசு ரூ.250 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. கழிவறைகளை அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவற்றை சரியான முறையில் நிர்வகிப்பதில் தான் சிக்கல் உள்ளது. புதிதாக 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் நியமனத்திற்கு வருகிற நவம்பர் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பி.சி.நாகேஸ் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்