ஆழ்குழாய் கிணறு அமைக்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கான மானியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கான மானியம் நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளர்.
பெங்களூரு:
ஆழ்குழாய் கிணறுகள்
கர்நாடக சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் யதீந்திரா, ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி, 'கர்நாடகத்தில் கடந்த 2019-20, 2020-21-ம் ஆண்டுகளில் 14 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் அந்த கிணறுகள் தோண்டப்படவில்லை. பாக்கியுள்ள ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ரூ.431 கோடி நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது' என்றார்.
இந்த பதிலால் திருப்தி அடையாத உறுப்பினர் யதீந்திரா, 'மாநிலம் முழுவதும் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க ஒரே ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒருவருக்கே பணியை வழங்கினால் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் அவரால் எப்படி ஆழ்குழாய் கிணறுகளை தோண்ட முடியும். மாவட்ட, தாலுகா அளவில் தனித்தனியாக டெண்டர் விட வேண்டும்' என்றார்.
வரவு வைக்கப்படும்
அப்போது முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே குறுக்கிட்டு, 'கர்நாடகத்தில் 14 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளன. அரசு இவ்வாறு செய்தால் சாமானிய மக்கள் என்ன செய்வார்கள். இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
அப்போது இந்த விவகாரத்திற்கு பதிலளித்த முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, 'கர்நாடகத்தில் 14 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டியது பாக்கி உள்ளது. ஆழ்குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பாண்டு முதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கான அரசின் நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பயனாளிகளே ஆழ்குழாய் கிணறுகைள அமைத்துக்கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் தற்போது 100 அடியில் கிணறு தோண்டினாலே நீர் கிடைத்து விடுகிறது. அதனால் ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிப்பேன்' என்றார்.