ராஜஸ்தான் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிப்பு..!!
ராஜஸ்தான் முதல்-மந்திரியை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது சோனியாகாந்தியிடம் மேலிட பார்வையாளர்கள் புகார் தெரிவித்தனர்.
புதுடெல்லி,
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அசோக் கெலாட், முதல்-மந்திரி ஆனார். 200 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளனர். இதற்கிடையே, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல், அடுத்த மாதம் 17-ந்தேதி நடக்கிறது. அதில், மேலிட ஆசியுடன், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் போட்டியிடுகிறார்.
ஆனால், 'ஒருவருக்கு ஒரு பதவி' என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். எனவே, அசோக் கெலாட்டுக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்-மந்திரியாக நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஆனால், முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அசோக் கெலாட் விரும்புகிறார்.
இருப்பினும், புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தும் நோக்கத்தில், மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அசோக் கெலாட்டுக்கு ஆதரவான 82 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் புறக்கணிப்பால், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கவில்லை. சபாநாயகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
சாந்தி தாரிவால் என்ற மந்திரியின் இல்லத்தில் அவர்கள் தனியாக கூட்டம் நடத்தினர். அவர்கள் சார்பில் 3 மந்திரிகள், மேலிட பார்வையாளர்களை சந்தித்தனர். மேலிடத்துக்கு 3 நிபந்தனைகளை முன்வைத்தனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு, முதல்-மந்திரியை தேர்வு செய்ய வேண்டும். சச்சின் பைலட்டையோ, அவருடைய ஆதரவாளரையோ தேர்வு செய்யக்கூடாது. எம்.எல்.ஏ.க்களை தனித்தனியாக சந்திக்காமல், குழுவாக சந்திக்க வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை முன்வைத்தனர். பின்னர், நவராத்திரி என்பதால், அவரவர் தொகுதிகளுக்கு சென்று விட்டனர்.
எம்.எல்.ஏ.க்களை எதிர்பார்த்து காத்திருந்த மேலிட பார்வையாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் வராததால், முதல்-மந்திரி தேர்வு கூட்டத்தை நடத்தாமலேயே நேற்று டெல்லி திரும்பினர்.
மேலிட பார்வையாளர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒருதரப்பு எம்.எல்.ஏ.க்களுக்காக நாங்கள் காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. அவர்கள் தனியாக கூட்டம் நடத்தியது ஒழுங்கீனமான செயல். மேலும் 3 நிபந்தனைகளையும் விதித்து, அதை தீர்மானமாக நிறைவேற்றுமாறு கூறினர். காங்கிரசின் 75 வருட வரலாற்றில், தீர்மானத்தில் நிபந்தனைகளே இடம்பெற்றது இல்லை. இது ஒருதரப்புக்கு சாதகமான செயல்.
நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. எல்லாவற்றையும் சோனியாகாந்தியிடம் சொல்வோம். அவர் இறுதி முடிவு எடுப்பார் என்று அவர் கூறினார்.
டெல்லி சென்ற மேலிட பார்வையாளர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். நடந்த விவரங்களை எடுத்துரைத்தனர். அசோக் கெலாட் ஆதரவாளர்கள் மீது அவர்கள் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.
முதல்-மந்திரி தேர்வில் சிக்கல் நீடிக்கும்நிலையில், சோனியாகாந்தி முடிவை எதிர்பார்த்து இருதரப்பினரும் காத்திருக்கிறார்கள். சோனியாவுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, மத்தியபிரதேச முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், அவசரமாக டெல்லிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். அசோக் கெலாட்டுக்கு நெருக்கமானவர் என்பதால், அவர் சமரச பேச்சுவார்த்தைக்கு அனுப்பப்படுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, அசோக் கெலாட்டுக்கு ஆதரவான கொறடா மகேஷ் ஜோஷி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-மந்திரியாக யாரை தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், மேலிடம் எடுக்கும் இறுதி முடிவு, எங்களுக்கு உடன்பாடானதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், அசோக் கெலாட் முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டால், சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடும் என்று சாந்தி தாரிவால் என்ற மந்திரி பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த நிகழ்வுகளால், அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் நிறுத்தப்படுவாரா? என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது.