தக்காளி-காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு

தக்காளி உள்பட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2023-06-29 21:40 GMT

சாகுபடி குறைந்துவிட்டது

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியுள்ளது. இந்த பருவமழை தொடங்கி 20 நாட்கள் ஆகியும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு மாநிலத்தில் மழை பெய்யவில்லை. அதிக மழை பொழிவு ஏற்படக்கூடிய தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏரி, குளங்கள், நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன.

மழை பெய்யாததால் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரின்றி கருகியுள்ளன. இதனால் உணவு பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தோட்டக்கலை பயிர்களான தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி பெருமளவில் குறைந்துவிட்டது. இவற்றின் காரணமாக கர்நாடகத்தில் தக்காளி, காய்கறிகளின் விலை திடீரென கிடுகிடு என உயர்ந்துவிட்டது.

இல்லத்தரசிகள் அதிர்ச்சி

கடைகளில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. இதே போல் தக்காளி, கேரட், கத்தரிக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் 1, 2 மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தக்காளி இல்லாமல் எந்த சாம்பாரும் தயாரிக்க முடியாது. தக்காளி விலையை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

தக்காளி மட்டுமின்றி பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரிய சுமை

இதுகுறித்து பெங்களூரு சாந்திநகரை சேர்ந்த அமுதா கூறுகையில், "தக்காளி உள்பட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் தக்காளி வாங்க முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். தக்காளி இல்லாமல் சாம்பார் செய்ய முடியாது. எல்லா வகையான சாம்பார், ரசத்திற்கும் தக்காளி தேவைப்படுகிறது. நான் கடைக்கு சென்று தக்காளி விலையை கேட்டு விட்டு அதை வாங்காமல் திரும்பி வந்துவிட்டேன்.எங்களைபோன்ற ஏழை மக்கள் எப்படி இவ்வளவு விலை கொடுத்து காய்கறிகளை வாங்க முடியும்?. தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கோரமங்களாவை சேர்ந்த பார்வதி கூறும்போது, "தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. திடீரென விலை உயர்ந்துள்ளதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். குறிப்பாக தக்காளி விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது. நாங்கள் எப்படி தக்காளி வாங்கி சாம்பார் தயாரிக்க முடியும். இந்த விலை உயர்வால் எங்களின் மாதாந்திர குடும்ப செலவு அதிகரிக்கும். இது எங்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய-மாநில அரசுகள் தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இருமடங்கு விலை உயர்வு

பெங்களூரு ராஜாஜிநகர் 6-வது பிளாக்கில் காய்கறி கடை நடத்தி வரும் பத்மா கூறுகையில், மழை சரியாக பெய்யாததால் மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதே வேளையில் காய்கறிகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரத்தை விட தக்காளி, கத்தரிக்காய், முள்ளங்கி, பீட்ரூட், கேரட், பீன்ஸ் உள்பட அனைத்து காய்கறிகளின் விலை ரூ.10 முதல் ரூ.40 வரை விலை உயர்ந்துள்ளது. எப்போதும் டீசல்-பெட்ரோல் விலை உயர்ந்தால், காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகளில் கட்டணம் உயர்த்தப்படும் போது காய்கறி விலை அதிகரிக்கும். தற்போது போதிய மழை பெய்யாததால் உற்பத்தி குறைந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள் என்றார்.

விலையை கட்டுப்படுத்த வேண்டும்

பெங்களூரு சோடுபாளையாவில் டிபன் சென்டர் நடத்தி வரும் செல்வம் கூறுகையில், காய்கறிகளின் விலை உயர்வால் எங்களை போல் சிறிய அளவில் உணவு விடுதி நடத்தி வருபவர்களும் சிரமப்படுகிறோம். வாடிக்கையாளர்களின் திருப்திப்படுத்தும் வகையில் காலையில் இட்லி, பொங்கல், பூரி, வடை, லெமன் சாதம், பொலாவும், மதியம் சப்பாதி, அன்ன சாம்பார் வழங்கி வருகிறோம். இந்த நிலையில் தக்காளி, கேரட், இஞ்சி, பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல் பூண்டு, பருப்பு, உளுந்து, அரிசி விலையும் அதிகரித்துவிட்டது. இருப்பினும் நாங்கள் சாம்பாரில் காய்கறிகளை பயன்படுத்துவதை குறைக்கவில்லை. விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும், நாங்கள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் உணவுகளை வழங்குகிறோம். காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

சிக்கமகளூரு மார்க்கெட் ரோட்டில் காய்கறி கடை நடத்தி வரும் அசோக் கூறுகையில், காய்கறிகளின் விலை உயர்வால், வாடிக்கையாளர்கள் குறைந்த அளவிலேயே காய்கறிகளை வாங்குவதை நான் பார்த்து வருகிறேன். முன்பு ஒரு கிலோ, அரை கிலோ காய்கறிகள் வாங்கி செல்லும் இல்லத்தரசிகள், தற்போது காய்கறிகளின் அளவை குறைத்துவிட்டனர். விைல ஏற்றத்தால், மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் அவதிப்படுவதை காண முடிகிறது. காய்கறி விலை மட்டுமல்ல பருப்பு, உளுந்து, இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இலவச மின்சார திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்தும் அரசு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விலை உயர்வுக்கு மழை பொய்த்தது ஒரு காரணம். மற்றொரு காரணம் காய்கறிகள் உற்பத்தி குறைவதால் அவற்றை சிலர் பதுக்கி விற்பதும் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்றார்.

விலை உயர்வால் பாதிப்பு

சிவமொக்கா எஸ்.எல்.பி. நகரில் வசிக்கும் குடும்பத்தலைவி உஷா விஸ்வநாத் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக காய்கறிகளின் விலை இரு மடங்கு மூன்று மடங்கு உயர்ந்து வருகிறது. எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினர் பட்ஜெட் போட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகிறோம். ஒரு மாதத்திற்கு மளிகைச் சாமான்களுக்கு இவ்வளவு காய்கறிகளுக்கு இவ்வளவு என நிதி ஒதுக்கி குடும்பத்தை நடத்தி வருகிறோம். மேலும் மின்கட்டணம், கியாஸ் சிலிண்டர் கட்டணம் உள்பட இதர செலவு, எதிர்பாராமல் வரும் மருத்துவ செலவு ஆகியவற்றை சமாளிக்க சிரமப்படுகிறோம். இந்த நிலையில் காய்கறிகள் விலை உயர்ந்திருப்பது, எங்களை பாதிக்கிறது. இதனால் காய்கறிகளை குறைந்த அளவிலேயே உணவில் பயன்படுத்தி வருகிறோம். தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளுது. இதனால் பெயரளவுக்கு மட்டும் தக்காளியை சாம்பார் உள்ளிட்டவற்றில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். விலை உயர்வை தொடர்ந்து தள்ளுவண்டியில் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்றார்.

தட்சிணகன்னடா மாவட்டம் மூடபித்ரி மார்க்கெட்டில் காய்கறிகடை நடத்தி வரும் கமலாக்ஷா கூறுகையில், கர்நாடகத்தில் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்தது. அதன்பிறகு கோடை காலத்தில் மழை பெய்யவில்லை. மேலும் தென்மேற்கு பருவமழையும் இதுவரை தொடங்கவில்லை. இதனால் காய்கறிகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டுகளில் வரத்து குறைவாக இருப்பதாலும், நுகர்வு தேவை இருப்பதாலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அனைத்து காய்கறிகளுமே கடந்த வாரத்தை ஒப்பிட்டால் ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் கஷ்டம் தான். விலை உயர்வால் மக்கள் குறைந்த அளவில் தான் காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். அதுபோல் ஓட்டல் நடத்துபவர்களும் விலை உயர்வால், வாடிக்கையாளர்களுக்கு திருப்திகரமாக உணவை வழங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஓட்டல்காரர்களும் தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்