சாலை பள்ளத்தால் விபத்து ஏற்பட்டால் போலீசார் வழக்கு பதியலாம்; ஐகோர்ட்டு நீதிபதி கருத்து

சாலை பள்ளம் காரணமாக விபத்து ஏற்பட்டால், அதையே காரணம் காட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்யலாம் என்றும், இதில் தயக்கம் காட்ட தேவையில்லை என்றும் ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-16 18:45 GMT

பெங்களூரு:

சாலை பள்ளம்

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. இதன் காரணமாக பிற மாநிலங்களை சேர்ந்த பலரும் பெங்களூருவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதனால் பெங்களூரு நகரம் வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும் இத்தகைய மெட்ரோபாலிட்டன் நகரில், சாலைகளின் நிலை மோசமாக உள்ளது.

மேலும், அந்த சாலைகளால் இதுவரை பலரும் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு சாலை பள்ளங்களை மூடுவது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் விஜயன் மேனன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி பிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி, 'சாலை பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தயக்கம் தேவையில்லை

அந்த பள்ளங்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பொதுப்பணி துறை சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வருகிற 23-ந் தேதிக்குள் பெங்களூரு சாலைகளில் உள்ள பள்ளங்களின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படும். சாலை விபத்தில் சிக்குபவர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க சென்றால், அவர்களிடம் போலீசார் புகார் பெறுவதற்கு தயங்குகின்றனர்.

இனி விபத்தில் சிக்குபவர்கள் உடனடியாக சென்று போலீஸ் நிலையங்களில் அதுதொடர்பாக புகார் அளிக்கலாம். மேலும், முதல் தகவல் அறிக்கையில் சாலை பள்ளத்தை குறிப்பிடுவதற்கு போலீசார் தயக்கம் காட்ட தேவையில்லை. தைரியமாக சாலை பள்ளத்தை காரணம் காட்டி வழக்குப்பதிவு செய்யலாம். இதுவரை சாலை பள்ளத்தால் உயிரிழந்தவர்கள், அவர்களது குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட மற்றும் வழங்கப்பட வேண்டிய நிவாரண தொகை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாநகராட்சிக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்