அதிகாரத்திற்கு நான் ஆசைப்படவில்லை, கட்சி சின்னம் எங்களிடம் தான் உள்ளது: சரத் பவார் பரபரப்பு பேச்சு

அதிகாரத்திற்கு நான் ஆசைப்படவில்லை என்றும் கட்சியின் சின்னம் தங்களிடம் தான் இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார்.

Update: 2023-07-05 11:00 GMT

மும்பை,

மராட்டியத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பாராத வகையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சகன் புஜ்பால், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே, ஹசன் முஷ்ரிப், உள்ளிட்ட 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். மராட்டிய அரசியலில் நடந்த இந்த திடீர் மாற்றம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித்பவார் தேசியவாத காங்கிரசை உடைத்தார். அஜித்பவார் கட்சியை உடைத்ததை அடுத்து சரத்பவார், அவரது ஆதரவாளர் ஜித்தேந்திர அவாத்தை எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தார். மேலும் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக அஜித்பவார் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற செயல் தலைவர் பிரபுல் பட்டேல், சுனில் தட்காரே எம்.பி.யை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.

இதேபோல மந்திரி பதவி ஏற்ற அஜித்பவார் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவும் சரத்பவார் தரப்பு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் கடிதம் கொடுத்தது.இந்தநிலையில் சரத்பவார், அஜித்பவார் தங்கள் பலத்தை நிரூபிக்க இன்று (புதன்கிழமை) களத்தில் இறங்கினர். . இருவரும் தனிதனியாக தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அஜித் பவார் நடத்திய கூட்டத்தில் 28 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

அதேபோல், சரத் பவாரும் தனியாக கூட்டத்தை நடத்தினார். அப்போது சரத் பவார் பேசியதாவது:- ஒட்டு மொத்த நாடும் நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறது. இந்தக் கூட்டம் தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்கு வரலாற்று சிறப்பு மிக்கது. தடைகளை தாண்டி நமது வழியில் நாம் முன்னேறி செல்ல வேண்டும். தனக்கு எதேனும் பிரச்சினை இருப்பதாக அஜித் பவார் கருதி இருந்தால் அவர் என்னிடம் பேசியிருக்க வேண்டும். மனதில் எதாவது இருந்தாலும் என்னை தொடர்பு கொண்டு இருக்கலாம். கட்சியின் சின்னம் நம்மிடம் தான் இருக்கிறது. நமக்கு அதிகாரத்தை கொடுத்த மக்களும் கட்சி தொண்டர்களும் நமக்கு ஆதரவாகவே உள்ளனர்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்