ஆக்கிரமிப்பு அரசு நிலங்களை விரைவாக மீட்க வேண்டும் ; தாசில்தாருக்கு, சி.டி.ரவி. எம்.எல்.ஏ. உத்தரவு

சிக்கமகளூருவில், ஆக்கிரமிப்பு அரசு நிலங்களை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாசில்தாருக்கு, சி.டி.ரவி. எம்.எல்.ஏ. உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-06-08 14:58 GMT

சிக்கமகளூரு;

எம்.எல்.சி. போஜேகவுடா

சிக்கமகளூருவில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்பது குறித்த ஆலோசனை கூட்டம் தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. இதில் சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி., எம்.எல்.சி. போஜேகவுடா, பஞ்சாயத்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தின்போது அதிகாரிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.சி. போஜேகவுடா பேசியதாவது:- அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான திட்டங்களை விரைவாக முடித்து கொடுக்க வேண்டும்.

பணியில் அலட்சியம் காட்ட கூடாது. கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அதில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட துணை கலெக்டர் நாகராஜிக்கு உத்தரவிட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சி.டி.ரவி எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:- சிக்கமகளூருவில் உள்ள தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்கும் பணிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த நிலங்களை மீட்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சிக்கமகளூருவில் உள்ள அரசு நிலங்களை மீட்க 3 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மயான வசதிகள்

பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு வழங்கிய மயான நிலங்களும் இதில் அடங்கும். அவற்றை ஆக்கிரமித்தவர்கள் அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையென்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மயான வசதிகள் இல்லாத கிராமங்களை கண்டறிந்து, அந்த கிராமங்களில் மயானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.

இதை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தின்போது தாலுகா பஞ்சாயத்து அதிகாரிகள் அரசு நிலங்களை மீட்பதில் சிறப்பாக செயல்படுவோம் என கூறினர். மேலும், பணியில் அலட்சியம் காட்டமாட்டோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்