கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரம்: கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் பற்றி 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-10-27 21:59 GMT

பெங்களூரு: பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புகளுக்கு காரணமான அதிகாரிகள் பற்றி 3 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கடந்த சில ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பிரச்சினை தலைதூக்கி வருகிறது. அதாவது மழைக்காலங்களில் அதிகளவில் மழைபொழிவு இருக்கும் சமயத்தில் பல பகுதிகளில் மழைநீர் தேங்குவதுடன், குடியிருப்புகள், சாலைகளை மூழ்கடித்தப்படி ஓடுகிறது. இதனால் மக்கள் சொல்ெலாண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் மகாதேவபுரா, வெளிவட்ட சாலை, சர்ஜாப்புரா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதற்கு அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கமிஷன் பெற்று பணிகளை மேற்கொண்டதே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக வெள்ள பாதிப்புக்கு ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகள் தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியும், அரசும் போர்க்கால அடிப்படையில் ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இருப்பினும் சில இடங்களில் அதிகாரம் மற்றும் பண பலம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐகோர்ட்டில் வழக்கு

இந்த நிலையல் கர்நாடக ஐகோர்ட்டில் அஸ்வத் நாராயண்கவுடா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளார்.

இந்த மனு ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி பிரசன்ன வரலே தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

வேடிக்கை பார்க்கிறார்களா?

அப்போது, தலைமை நீதிபதி பிரசன்ன வரலே பேசுகையில், "பெங்களூருவில் பெரிய பெரிய கட்டிடங்கள் ஒரே நாளில் கட்டப்பட்டதா?, நமது அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?, அலுவலகத்தில் உட்கார்ந்து அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்களா?, கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும்போது, ஆவணங்களை ஆய்வு செய்வது இல்லையா?.

தனது சொத்துகளை அரசு கண்காணிப்பது இல்லையா?, பிற துறைகளிலும் இதே நிலைதான் உள்ளதா?, அரசு துறைகள் இடையே பரஸ்பர புரிதல் இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன. ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து கேள்விகளை எழுப்பினர்.

சம்பளம் நிறுத்தி...

மேலும் தலைமை நீதிபதி பேசும்போது, "பெங்களூருவில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநகராட்சி தலைமை கமிஷனருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் என்ஜினீயர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும்? என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்