டெல்லியில் கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை திறக்க கெஜ்ரிவால் அரசு முடிவு
டெல்லியில் கெஜ்ரிவால் அரசு கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினர் பயன்பெறும் நோக்கில் மொஹல்லா கிளினிக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை சமூக சுகாதார சேவை மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
டெல்லியில் தற்போது, 519 மொஹல்லா கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இலவச ஆரம்ப சுகாதார நல சேவைகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுவதுடன், வெவ்வேறு வகையான 212 பரிசோதனைகளும் செய்யப்படுகின்றன.
நாள்தோறும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கிளினிக்குகளுக்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், டெல்லியின் சுகாதார அமைச்சக கூடுதல் பொறுப்பு வகிக்கும் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, பொது பணி துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறையினருடன் இன்று சந்திப்பு நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டன. இதன்படி, டெல்லியில் கெஜ்ரிவால் அரசு கூடுதலாக 100 மொஹல்லா கிளினிக்குகளை விரைவில் திறக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அவை முடிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.