தி காஷ்மீர் பைல்ஸ் பட விவகாரம்; இஸ்ரேல் தூதருக்கு டுவிட்டரில் மிரட்டல் விடுத்த மர்ம நபர்

உன்னை போன்ற அழுக்குகளை எரித்ததற்காக சிறந்தவர் ஹிட்லர், உடனே இந்தியாவை விட்டு வெளியேறு என இஸ்ரேல் தூதருக்கு மர்ம நபர் டுவிட்டரில் கடுமையான மிரட்டல் விடுத்துள்ளார்.

Update: 2022-12-03 09:17 GMT


புதுடெல்லி,


கோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வு குழு தலைவர் நடாவ் லேபிட் பேசினார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குனரான அவர், தி காஷ்மீர் பைல்ஸ் பரப்புரை நோக்கம் கொண்ட கொச்சையான திரைப்படம் என்று கூறினார்.

அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் எழுந்தன. இந்நிலையில், அவரது கருத்துக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நாவர் கிலான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடாவ் லேபிடை, கிலான் கடுமையாக விமர்சித்து இருந்ததுடன், இந்திய மற்றும் இஸ்ரேலிய உறவுகளை புண்படுத்தி உள்ளார் என கண்டனமும் வெளியிட்டார். இதுபற்றி வெளிப்படையாக கடிதம் ஒன்றையும் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.

அதில், இந்திய சகோதர, சகோதரிகளும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஹீப்ரு மொழியில் இதனை எழுதவில்லை என்றும் குறிப்பிட்டார். லேபிடை, அப்படி அவர் பேசியதற்காக வெட்கப்பட வேண்டும் என்றும் கடுமையான முறையில் சாடினார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலானுக்கு டுவிட்டரில், கடுமையான மிரட்டலை தெரிவிக்கும் வகையிலான மற்றும் வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் விமர்சனங்கள் வந்துள்ளன.

இதனை அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், நேரடியாக நபர் ஒருவர் எனக்கு பதிவிட்ட தகவலை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். அந்த நபர் பிஎச்.டி. முடித்திருக்கிறேன் என அவரது முகப்பு பக்கம் தெரிவிக்கின்றது.

எனது பாதுகாப்பை பற்றி கூட அவர் கவலைப்படாதபோதும், அவரது அடையாளம் பற்றிய தகவல்களை அழிக்க முடிவு செய்தேன். அந்த செய்தியில் அந்த நபர், உன்னை போன்ற அழுக்குகளை எரித்ததற்காக ஹிட்லர் சிறந்தவர்.

உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறு. ஹிட்லர் ஒரு சிறந்த மனிதர் என தெரிவித்து வணக்கத்திற்கான எமோஜியும் முடிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது என தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி கிலான் டுவிட்டரில் வெளியிட்ட மற்றொரு செய்தியில், நான் ஒன்றும் திரைப்பட நிபுணர் இல்லை. ஆனால், வரலாற்று சம்பவங்களை ஆழ்ந்து படிக்காமல் அவற்றை பற்றி பேசுவது அர்த்தமற்றது மற்றும் ஆணவமிக்கது.

ஏனெனில், இதனால் காயம்பட்ட மக்கள் இந்தியாவில் இன்னும் உள்ளனர். இன்னும் விலை கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

நானும் கூட இன படுகொலையில் இருந்து தப்பி வந்தவரின் மகன் என்ற முறையில், இந்தியாவில் இருந்து வரும் எதிர்வினைகளை கண்டு துன்புறுகிறேன். லேபிடின் அறிக்கைகளை சந்தேகமேயின்றி கண்டிக்கிறேன். அதில் நியாயப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை. அந்த படம் காஷ்மீர் விவகாரங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்