குளிர்கால கூட்டத்தொடருக்காக பெலகாவியில் கர்நாடக சட்டசபை டிசம்பர் 19-ந்தேதி கூடுகிறது

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 19-ந்தேதி பெலகாவியில் தொடங்குவது என்று மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-11-17 18:45 GMT

பெங்களூரு:

சந்தன மர கொள்கை

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வனத்துறையால் கொண்டு வரப்பட்ட சந்தன மரம் வளர்ப்பு கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம். அதன்படி விவசாயிகள் தங்களின் நிலங்களில் சந்தன மரங்களை வளர்க்கலாம். அதை சந்தையில் விற்று பயன் பெறலாம். சர்வதேச அளவில் சந்தன மரத்திற்கு அதிகளவில் தேவை எழுந்துள்ளது. அதை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

மருத்துவ உபகரணங்கள்

சந்தன மரங்கள் திருடப்படுவதை தடுக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த கொள்கையில் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. துமகூருவில் ரூ.56 கோடி செலவில் கொடிய நோய் சிகிச்சை அளிப்பதற்கான ஆஸ்பத்திரியை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நோய்களை கண்டறியும் மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ய ரூ.154 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

ரூ.158 கோடி செலவில் கோலார், சிக்கமகளூரு, ராய்ச்சூர், தாவணகெரே, பாகல்கோட்டையில் தாய்-சேய் ஆஸ்பத்திரிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகல் இந்த ஆஸ்பத்திரி அமைகிறது. பெங்களூரு மல்லேஸ்வரம் கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் விபத்து சிகிச்சை பிரிவு தொடங்க ரூ.35 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

குளிர்கால கூட்டத்தொடர்

ரூ.600 கோடியில் ராமநகர் மாவட்டம் அர்ச்சகரஹள்ளியில் ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் மாதம் 19-ந் தேதி பெலகாவியில் தொடங்கும். இந்த கூட்டத்தொடர் 30-ந் தேதி வரை (சனி,ஞாயிறு விடுமுறையை தவிர்த்து) 10 நாட்கள் நடைபெறும். சி. டி. பிரிவு அரசு ஊழியர்கள் ஒரு மாவட்டத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு கணவன்-மனைவி வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றினால், அவர்களுக்கு பிற மாவட்டங்களுக்கு பணி இடமாறுதல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்