தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து அரசு தவறு செய்தது; எடியூரப்பா, பசவராஜ் பொம்மை விமர்சனம்

தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து அரசு தவறு செய்ததாக பா.ஜனதா தலைவர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் கூறியுள்ளனர்.

Update: 2023-09-21 18:45 GMT

பெங்களூரு:

சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச வேண்டும். இதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோருவது சரியல்ல. தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டு இந்த அரசு தவறு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் சரியான வாதங்களை எடுத்து வைப்பதில் கர்நாடக அரசு தோல்வி அடைந்துவிட்டது.

இதன் மூலம் அரசு சரியான முறையில் வழக்கை எதிர்கொள்ள தயாராகவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். அங்கு கர்நாடகத்தில் நிலவும் உண்மை நிலையை எடுத்துக் கூற வேண்டும். கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு குறித்து ஆராய சுப்ரீம் கோர்ட்டு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். இதை சுப்ரீம் கோர்ட்டில் அரசு தெரிவிக்க வேண்டும். காவிரி விஷயத்தில் மாநில அரசு தொடக்கம் முதலே தவறு செய்து வந்துள்ளது.

இவ்வாறு எடியூரப்பாகூறினார்.

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இது துரதிருஷ்டமானது. தொடக்கத்திலேயே சுப்ரீம் கோர்ட்டில் அரசு மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். இவ்வளவு நீரை தங்களால் வழங்க முடியாது என்று கூறி இருந்தால், இந்த நிலை கர்நாடகத்திற்கு வந்திருக்காது. இதுகுறித்து நாங்கள் பல முறை கூறினோம். இதை அரசு ஏற்கவில்லை.

தமிழகம் 2 போக பயிர்களுக்கு நீர் கேட்கிறது. இங்கு குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் தவறான வழியில் நீரை பயன்படுத்தியுள்ளது. நமக்கு தேவைான நீர் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக்கூற வேண்டும். தொடக்கத்திலேயே தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட்டு அரசு தவறு செய்துள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்