காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலன் காக்க அரசு தயார்; விவசாய மந்திரி செலுவராயசாமி பேட்டி
காவிரி பிரச்சினையில் கா்நாடகத்தின் நலனை காக்க அரசு தயாராக உள்ளதாக மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடும் அதிகாரம் கர்நாடக அரசுக்கு இல்லை. இந்த அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. நீர்ப்பாசனத்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மத்திய அரசிடம் கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாததால், தமிழகத்திற்கு நீர் திறக்க முடியவில்லை என்று விளக்கி கூறியுள்ளார். காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகத்தின் நலன் காக்க அரசு தயாராக உள்ளது.
ஏரி-குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது மண்டியா விவசாயிகள் தண்ணீர் திறக்கும்படி கேட்டனர். அதற்கு அவர், தண்ணீர் திறக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை, அது மத்திய அரசிடம் உள்ளதாக கூறினார். இதை நான் அவருக்கு நினைவூட்டுகிறேன். மழை பற்றாக்குறையாக பெய்கிறபோது, நீர் தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம்.
நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளோம். அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்போம். வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 சதவீதம் பணிகளை முடித்த காண்டிராக்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும். விசாரணை நடத்தாமலேயே பணம் பட்டுவாடா செய்ய முடியுமா?.
எனக்கு எதிராக கவர்னருக்கு அதிகாரிகள் கடிதம் எழுதியதாக வெளியான தகவல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை. மேல்நோட்டமாக பார்க்கும்போது அந்த கடிதம் போலி என்று தெரியவந்துள்ளது. நானும், மந்திரி ஜமீர்அகமதுகானும் இப்போதும் நண்பர்களே. எங்களின் நட்பு நன்றாகவே உள்ளது.
இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.