தலையில் உரல் கல்லை போட்டு தந்தை படுகொலை

வீட்டின் முன்பு தூங்கி கொண்டிருந்தபோது, தலையில் உரல்கல்லை போட்டு தந்தையை கொலை செய்த மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update:2023-06-16 00:15 IST

பெங்களூரு:-

ஒப்பந்த ஊழியர்

பெங்களூரு மாகடி ரோட்டில் 2-வது கிராசில் வசித்து வருபவர் சேத்தன் (வயது 28). இவர் பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். சேத்தனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது தந்தை கங்காராஜூ (வயது 55). இவருக்கும், மகன் சேத்தனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஒருவரை, ஒருவர் கடுமையாக திட்டி உள்ளனர். இதற்கிடையே இருவரும் இரவில் தூங்குவதற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில், எழுந்த சேத்தன், வீட்டில் கிடந்த உரல் கல்லை எடுத்து, வீட்டின் முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த தனது தந்தையின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கங்காராஜூ உயிருக்கு போராடினார்.

போலீஸ் விசாரணை

இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கங்காராஜூவை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து உடனடியாக மாகடி ரோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் கங்கராஜூவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் மேற்கு மண்டல உதவி போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினார்.

கைது

இதையடுத்து அவர் கூறுகையில், 'தந்தை-மகன் இடையே ஏற்கனவே கடந்த சில வாரங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுதொடர்பாக எழுந்த வாக்குவாதம் தற்போது கொலையில் முடிந்துள்ளது.

இன்று (அதாவது நேற்று) அதிகாலையில் சேத்தன், வீட்டில் கிடந்த உரல் கல்லை எடுத்து தந்தையின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னர் தலைமறைவாகிவிட்டார். அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது' என்றார்.

பெற்ற தந்தையை மகன், உரல் கல்லை போட்டு கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்