ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுடன் நிற்கிறது: மல்லிகார்ஜுன கார்கே

வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-30 07:15 GMT

புதுடெல்லி,

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு குறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது. நிலச்சரிவு காரணமாக மண்ணுக்கடியில் சிக்கியுள்ளவர்கள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இந்நேரத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் வயநாடு மக்களுடன் நிற்கிறது. மாநிலங்களவை தலைவர் நீங்கள் எங்களுக்கு தகவலை கொடுக்கிறீர்கள் ஆனால் நாங்கள் மத்திய அரசிடமிருந்து முழு தகவல்களை எதிர்பார்க்கிறோம்.

வயநாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது?. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு இந்திய ராணுவம் சென்றுள்ளதா?. மீட்பு பணி நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை என்ன?. வயநாடு நிலச்சரிவு சம்பவம் தொடர்பான தகவல்களை மத்திய அரசு வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்