காருக்குள் வைத்து பூட்டி விட்டு கோவை சென்ற தொழில் அதிபரால் உயிருக்கு போராடிய நாய்

பெங்களூருவில் விமான நிலையத்தில், காருக்குள் வைத்து பூட்டிவிட்டு கோவை சென்ற தொழில் அதிபரால் நாய் உயிருக்கு போராடியது. மத்திய பாதுகாப்பு படைவீரர் உரிய நேரத்தில் மீட்டு சிகிச்சை அளித்ததால் அந்த நாய் உயிர் பிழைத்தது.

Update: 2023-08-09 18:45 GMT

பெங்களூரு, ஆக.10-

கோவை சென்ற தொழில் அதிபர்

பெங்களூரு கல்யாண்நகரை சேர்ந்தவர் விக்ரம் ராமதாஸ் லிங்கேஷ்வர். தொழில் அதிபரான இவர், தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் விக்ரம் பெங்களூருவில் இருந்து விமானத்தில் தமிழ்நாடு கோவை புறப்பட்டு சென்றார். இதற்காக அவர், கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு வந்தார். அப்போது தான் வளர்த்து வரும் நாயையும் உடன் அவர் அழைத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விமான நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, நாயை காருக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு விக்ரம் சென்று விட்டார். காரின் கண்ணாடிகள் மூடப்பட்டு இருந்ததால், நாய் வெளியே வரமுடியாமல் தவித்தது. மேலும் மூச்சு விடாமல் திணறியதுடன், தொடர்ந்து குரைத்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக நாயின் மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடியது.

பாதுகாப்பு படைவீரர் மீட்டார்

அந்த சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய பாதுகாப்பு படைவீரர் ஒருவர் காரின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் காருக்குள் சென்று பார்த்த போது தான் நாய் உயிருக்கு போராடுவது தெரியவந்தது. உடனே கார் கண்ணாடியை உடைத்து அந்த நாயை அவர் மீட்டார்.

மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் உடனடியாக நாய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர் மேற்கொண்டார். இதையடுத்து, நாய் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. காரின் உரிமையாளர் பற்றி விசாரித்த போது தான், அது கல்யாண்நகரை சேர்ந்த விக்ரமுக்கு சொந்தமானது என்று தெரிந்தது.

தொழில் அதிபருக்கு எச்சரிக்கை

அதே நேரத்தில் நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு திரும்பிய தொழில் அதிபர் விக்ரமை விமான நிலைய போலீசார் மடக்கி பிடித்தார்கள். மேலும் காருக்குள் வைத்து நாயை பூட்டி சென்றது குறித்து அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

விசாரணையில், அவசரத்தில் நாயை காருக்குள் வைத்து பூட்டி சென்ற தெரியவந்ததால், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக்கூடாது என்று போலீசார் எச்சரித்துடன், இதற்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிவிட்டு விக்ரமை அனுப்பி வைத்தார்கள்.

இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்