ரெயில் விபத்து: பலி எண்ணிக்கை 288 அல்ல, 275 - ஒடிசா தலைமை செயலாளர் விளக்கம்
சில உடல்கள் 2 முறை எண்ணப்பட்டு விட்டதாகவும் ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 அல்ல, 275 என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
புவனேஷ்வர்,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் ஒரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் விபத்தில் சிக்கின.அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது நிகழ்ந்த இந்த திடீர் விபத்தால், ரெயில் பெட்டிகள் ஒன்றுக்கொன்று மோதி உருக்குலைந்தன.
ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நின்றன, ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி சிதைத்தன.தடம்புரண்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் நொறுங்கி விட்டன. விபத்தில் சிக்கிய 3 ரெயில்களில் 2 ரெயில்கள் பயணிகள் ரெயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இதில் பலர் சம்பவ இடத்திலேயே அடுத்தடுத்து உயிர் இழந்தனர் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 288 என்று நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275 தான் எனவும் ஒடிசா அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா கூறியதாவது: ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 275 ஆகும். 288 கிடையாது. மாவட்ட மாஜிஸ்திரேட் தரவுகளை சரிபார்த்ததில் சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 275 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளனர்" என்றார்.