சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பி கொடுத்த கடையில் சிலிண்டர் வெடித்து சிறுவன் சாவு

பெங்களூருவில் சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பி கொடுத்த கடையில் சிலிண்டர் வெடித்து சிறுவன் பலியான பரிதாபம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2023-03-05 20:33 GMT

யாதகிரி:

சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பி...

யாதகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சரவணா. இவரது மனைவி மல்லவ்வா. இந்த தம்பதிக்கு 13 வயதில் மகேஷ் என்ற மகன் இருந்தான். பெங்களூரு ஹெப்பால் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குட்டதஹள்ளியில் சரவணா தனது மனைவி, மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சரவணாவும், மல்லவ்வாவும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

நேற்று காலையில் அவர்கள் 2 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். அப்போது மகேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான். சரவணாவின் வீட்டையொட்டியே வீடுகளுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர்களில் இருந்து சட்டவிரோதமாக சிறிய சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பி கொடுக்கும் கடையை லிகாயத் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

சிறுவன் சாவு

நேற்று காலையில் அந்த கடையில் சிறுவன் நின்று கொண்டிருந்தான். அந்த சந்தர்ப்பத்தில் கியாஸ் நிரப்பி கொடுத்துவிட்டு ஒரு சிலிண்டரை வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், திடீரென்று கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் சிறுவன் மகேஷ் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினான். உடனடியாக அவனை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகேசின் உடலை பார்த்து பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. சட்டவிரோதமாக கியாஸ் நிரப்பி கொடுத்ததால், சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து வெடித்து சிதறி சிறுவன் பலியானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டிடத்தின் உரிமையாளர் தேவராஜ், கடையை நடத்தி வந்த லிகாயத் மீது ஹெப்பால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்