கோலார் மாவட்டத்தில் முழுஅடைப்பு அமைதியாக நடந்தது

கோலார் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. ஆட்டோ, பஸ்கள் ஓடாததால் மாணவர்கள், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

Update: 2023-09-29 18:45 GMT

கோலார் தங்கவயல்

முழுஅடைப்பு

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 26-ந்தேதி பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்த நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கு பல்வேறு கன்னட அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இதேபோல், கோலார் மாவட்டத்திலும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு கன்னட அமைப்பினர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அதன்படி நேற்று கோலார் மாவட்டத்தில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

மக்கள் அவதி

கோலார் மாவட்டத்தில் கோலார், கோலார் தங்கவயல், மாலூர், முல்பாகல், சீனிவாசப்பூர், பங்காருபேட்டை ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் சாலையில் ஓடவில்லை. அரசு பஸ்கள் குறைவான அளவிலேயே இயக்கப்பட்டன.

பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்படவில்லை. அவை வழக்கம் போல செயல்பட்டன. ஆனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

மேலும் அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த முழுஅடைப்பு காரணமாக நேற்று கோலார், மாலூர், கோலார் தங்கவயலுக்கு தமிழக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தமிழகம் செல்ல வந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.

அமைதியாக நடந்தது

கோலார் தங்கவயலில் மதியம் 2 மணி வரை கடைகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது. அதன்பிறகு கடைகள், தொழில் நிறுவனங்கள் திறக்கப்பட்டன. ஆட்டோக்கள், பஸ்கள் வழக்கம் போல ஓடின. கோலார் தங்கவயலில் 2 மணிக்கு பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பியது.

கோலார் தங்கவயல் மட்டுமின்றி கோலார் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் போராட்டம் நடந்தது. மேலும் பாதுகாப்புக்காக மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கோலார் மாவட்டத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் இன்றி முழுஅடைப்பு போராட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்