தற்கொலை செய்த மடாபதியின் செல்போன்கள் பறிமுதல்
ராமநகர் அருகே தற்கொலை செய்து கொண்ட மடாதிபதியின் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். அவர் ஹனிடிராப் முறையில் மிரட்டப்பட்டாரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநகர்:
மடாதிபதி தற்கொலை
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சாமி. இவர் நேற்று முன்தினம் மடத்தில் உள்ள தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கி இருந்தது. அந்த கடிதத்தில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாகவும், தனக்கு மிரட்டல் வருவதாகவும் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு
இந்த நிலையில் மடாதிபதிக்கு யாரோ அடிக்கடி வீடியோ கால் பேசியதும் தெரியவந்து உள்ளது. இதனால் அவர் பயன்படுத்திய 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் மடாதிபதி பசவலிங்க சாமியின் டைரியையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.
மேலும் ஹனிடிராப் முறையில் மடாதிபதி மிரட்டப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மடாதிபதியின் தற்கொலை குறித்து அவரது உதவியாளர் ரமேஷ் அளித்த புகாரின்பேரில் குதூர் போலீசார் பிரிவு 306-ன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.