"இந்தியா" கூட்டணி கட்சித் தலைவர்களின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் தொடங்கியது.!
இந்த கூட்டத்தில் "இந்தியா" கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) வெளியிடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.;
மும்பை,
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு உள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பீகார் மாநிலம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் கடந்த மாதம் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் நடந்தது.
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட நிலையில் 'இந்தியா' கூட்டணியின் 3-வது கூட்டம் மராட்டிய தலைநகர் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், மும்பை சாந்தாகுருஸ் பகுதியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலில் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மகனும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டணிக்கு அமைப்பாளரை நியமிப்பது மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்தும் முடிவு செய்யப்படுகிறது. இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை (லோகோ) வெளியிடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.