குஜராத்தில் 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது

குஜராத்தில் 2ம் கட்டமாக நாளை மறுநாள் (5ம் தேதி) மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

Update: 2022-12-03 07:40 GMT

அகமதாபாத்,

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1ம் தேதி ( வியாழக்கிழமை) வாக்குப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 63.75 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

2ம் கட்டமாக நாளை மறுநாள் (5ம் தேதி) மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அகமதாபாத், வதோதரா, காந்திநகர், உள்ளிட்ட 14 மாவட்டங்களில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 833 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதையடுத்து அந்த தொகுதிகளில் தங்கி உள்ள வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு தேர்தல் நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளுக்கு ஓட்டு எந்திரங்கள் மற்றும் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உள்ளிட்ட பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படுகிறது.

தேர்தல் அமைதியாக நடைபெறும் வகையில் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பதற்றமான ஓட்டுச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதையொட்டி தலைவர்கள் இறுதிகட்ட ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர்.

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, குஜராத் முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு முகாமிட்டு அனல்பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் ரோடு-ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொண்டார்.

இதேபோல் காங்கிரசுக்கு ஆதரவாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் மூத்த தலைவர்கள் உச்ச கட்ட பிரசாரம் செய்தனர். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும். டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை இதுவரை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே மட்டும்தான் போட்டி நிலவி வந்தது. ஆனால் இம்முறை ஆம் ஆத்மி கட்சி முழு பலத்துடன் களத்தில் குதித்து உள்ளதால் அங்கு மும்முனை போட்டி உருவாகி உள்ளது.

வருகிற 8ம் தேதி (வியாழக்கிழமை) ஏற்கனவே நடந்து முடிந்த இமாசலப்பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அன்று பிற்பகல் இந்த 2 மாநிலத்திலும் யார்? ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரியவரும். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 6 முறை நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி கட்டிலில் உள்ளது.

பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் இம்முறை 7வது தடவையாக அக்கட்சி வெற்றி வாகை சூடுமா? என இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்று கம்யூனிஸ்டு கட்சி சாதனை படைத்தது. இதனை சமமாக்கும் விதத்தில் குஜராத்தில் பாஜக சாதனை படைக்கும் என அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னோட்டமாக குஜராத் மற்றும் இமாசலப் பிரதேச மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பதால் பலத்த எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்