12 நாட்களில் 16 பேரை கொன்ற யானை - ஜார்கண்டில் அட்டகாசம்
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்ட பகுதிகளில் ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள 4 மாவட்ட பகுதிகளில் ஒரு காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 12 நாட்களில் ஹசாரிபாக், ராம்கர், சத்ரா, லோகர்தகா மற்றும் ராஞ்சி மாவட்ட பகுதிகளில் 16 பேர் அந்த யானையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.
ராஞ்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து கூறும்போது, "ராஞ்சி மண்டல வனப்பகுதியில் 5 பேர் யானை தாக்கி இறந்துள்ளனர். நேற்று முன்தினம் யானையை கண்ட கிராம மக்கள் சிலர் அதை சூழ்ந்து வேடிக்கை பார்த்தபோது அவர்களை யானை துரத்தி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானைகளை யாரும் நெருங்க வேண்டாம், காலை மற்றும் மாலை வேளையில் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்ற எச்சரிக்கையை பின்பற்றாததாலும் இதுபோன்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. பல்வேறு இடங்களிலும் நடந்த தாக்குதலில் ஈடுபட்டது ஒரே யானை போல தெரிகிறது. இருந்தாலும் அதை உறுதிப்படுத்த ஆய்வுகள் செய்து வருகிறோம். யானையை கட்டுப்படுத்த மேற்கு வங்காளத்தில் இருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டு உள்ளது" என்றனர்.
கடந்த 2021-22-ம் ஆண்டில் ஜார்கண்டில் யானை தாக்கி 133 பேர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.