மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து

பெங்களூரு அருகே மரச்சாமான் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

Update: 2023-03-09 18:45 GMT

ஆனேக்கல்:

மரச்சாமான் கடையில் தீ

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா கைகொண்டரஹள்ளி பகுதியில் சர்ஜாப்புரா ரோட்டில் மரச்சாமான் கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் அந்த மரச்சாமான் கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

அந்த தீ, அக்கம்பக்கத்து கடைகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு மளமளவென எரிந்தது. இதையடுத்து அந்தப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பல லட்சம் ரூபாய் பொருட்கள்...

அதன்பேரில் தீயணைப்பு படையினர் 2 வாகனங்களில் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர், கடையில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர். மேலும் மற்ற கடைகளுக்கு தீ பராமல் கட்டுப்படுத்தினர். ஆனாலும் அதற்குள் மரச்சாமான் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. மற்ற கடைகளில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டவில்லை.

மரச்சாமான் கடையில் இருந்த மெத்தைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பரபரப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெல்லந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மரச்சாமான் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்து நடந்த இடம் மெயின் ரோடு என்பதால், அங்கு ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்